கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஏப்ரல் 20, 2015

தமிழினம் தழைக்க ....

தமிழினம் தழைக்க 
தமிழகம் தழுவவேண்டும்... 
மதுவற்ற மாநிலத்தை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

சாவிகொடுத்த பொம்மைபோல் ....

எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் ...
வேகமாக நடந்து செல்வோரின் கைகள்
அவரவர்களின் மனவோட்டத்தின்படி
அசைந்து அசைந்து ஊஞ்சலாடுகிறது !
சாவிகொடுத்த பொம்மைபோல் சிலர்
முகத்தில் சலனமற்று பயணிக்கின்றனர் !
நாளைய வாழ்க்கையின் இருத்தலுக்காய்
இருப்புக்கொள்ளாமல் தேடுதல் வேட்டை !
இடையிடையே தர்மநெறி  தேர்வு நடத்தும்
பாதையோர பிதாமகர்கள் !
காலனின் கையாட்களாய்
சாலைகளெங்கும்  போக்குவரத்து
விதிமீறும் வாகனவோட்டிகள் !
தமிழில் பேசினால் அவமானமென்று
ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கும்
இளைய தலைமுறைகள் .....
எதையும் காதில் போட்டுக்கொள்ளாது
அலைபேசி பாடல்களில் மூழ்கியபடி
பேசா மானுட பிறவிபோல்
இருப்பிடத்தை தொலைத்தவாறே நகர்கிறது !
பணம் கொடுத்து எதையும் வாங்கும்
 நகரத்து பகட்டு நரக வாழ்வுதனில்
மனிதநேயம் மறைந்தே போனது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 09, 2015

சிறுவனின் வயிறும் ...

போஸ்டர் ஒட்டிய
சிறுவனின் வயிறும் ...
ஒட்டியிருந்தது பசியால் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஜனவரி 20, 2015

கனவில் அந்த மூவரும்.....ஊருக்குள் நுழையும்
தார்சாலையின்
ஓரத்தில்
சிதிலமடைந்த மண்டபம்...!
மண்டபத்தின் கூரையின்
நடுவில்
பெரியதாய் ஆலமரம்
தழைத்திருந்தது !

சிற்பவேலைப்பாடுகளுடன்
தூண்கள்...!
தரைப்பகுதி கற்கள்
களவாடப்பட்டு
குண்டும் குழியுமாய் இருந்தது !
சிலந்திக்கூட்டுக்குள்
சிக்கியிருந்த பூச்சிகள்
தவித்துக் கொண்டிருந்தன !

ஆடுமேயத்த சிறுவன்
ஒருவன்  
ஆட்டுக் குட்டியுடன்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்  
எதிரில் கட்டப்பட்டிருந்த
பஞ்சாயத்து நிழற்குடையின் கீழ்
அடுத்த பேருந்துக்காக
ஐந்தாறுபேர் நின்றிருந்தனர்!

கோடை காலத்தின்
வெப்பத்தை தாங்கமுடியாது  
அயர்ந்த உறக்கத்தில் இருந்த
அந்தச் சிறுவனின் கனவில்
மூவர் வந்து சென்றனர்.....
கண்விழித்த சிறுவனுக்கு
நினைவில் நின்றது....
கனவில் அந்த முவரும்
இவனுடன் அந்த மண்டபத்தில்
இளைப்பாறியதாய்......!
அவர்கள் கோவலன்,
கண்ணகியுடன் கவுந்தியடிகள்
என்பதுமட்டும்
அவனுக்கு தெரியவில்லை!

ஆனால் .......சரித்திர சான்றுகளின்
புனைவுகளில் என்றும்
இலயித்தவரே இருக்கின்றனர்
இன்றைய எழுத்தாளர்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், ஜனவரி 13, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!செந்நெல் தழைக்க இத்தரை மகிழும்
தைமுதல் நாளாம் பொங்கல் திருநாள் !
உழவர்தம் உளம்மகிழும் வேளாண் சிறக்க - தேசிய
நதிநீர் இணைப்பு வழி நலம் சேர்ப்போம் நாட்டில் !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, ஜனவரி 03, 2015

படிகட்டுகள் இல்லாத மலை...

படிகட்டுகள் இல்லாத மலை
மனிதன் ஏற முடியவில்லை...
மரங்கள் தழைத்திருக்கின்றன !

........கா.ந.கல்யாணசுந்தரம்.