கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஜனவரி 27, 2012

இந்தக் காதல் எதுவரை?
















புரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின் விளிம்புகள்!
வயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை
துணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம் நேசமுடன் எந்நாளும் !


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை)

தூரத்து உறவுகள் எப்போதும் ......

உறவுகளில் உன்னதமென்று
மாதா, பிதா. குரு தெய்வமென முன்னோர்கள்
அந்நாளில் கண்டறிந்த உண்மை!
அகல உழுவதிலும் ஆழ உழும் விவசாயி
கொண்டிருக்கும் உறவோ விளை நிலமீது!
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லையென
நெசவாளியின் உறவோ நெய்யும் தறி மீது!
உண்ண உணவு உடுக்க உடை
இவ்விரண்டும் கிடைத்தபின்
இருக்கும் இடம்தான் இன்றியமையாதது!
இடர் அகற்றி இனிதே தங்க
வீடென்பது விதிவிலக்கல்ல வாழ்வுக்கு!
உறவுகளின் மேன்மை சுற்றத்தாரோடு
முடிவதில்லை மானுட வாழ்வில்!
கற்றறியா சிற்பி கல்லுடன்
உளிகொண்டு உறவாடலில்
உன்னத சிலை வடிக்கும்
அற்புதம் காண்கின்றோம்!
உறவுகள் அண்மையில் இருப்பினும்
சேய்மையில் இருப்பினும்
மேன்மை காண்பதில்
இருக்கிறது மனிதநேயம்!
உவர்ந்து கசந்த போதிலும்
தூரத்து உறவுகள் எப்போதும்
இனிப்பதுண்டு பலாச்சுளையாய்......
பிரிவின் நிழலில் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.