கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், மார்ச் 08, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ( தொடர் – 1)உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ( தொடர் – 1)
*******************************************************************
இலங்கை மட்டக்களப்பு – ஓட்டமாவடி “ நுட்பம் “ இலக்கிய ஆண்டு விழாவுக்கு பத்துபேர் கொண்ட கவிஞர் குழுவுடன் 24/02/2018 அன்று பயணமானோம். பிப்ரவரி 25 அன்று விழா இனிதே முடிந்தது.
விழா நிகழ்வுகள் சிறப்பாக இருந்தன. இலங்கை பயணம் தொடங்கியது முதலே..... மனதுக்குள் ஈழத் தமிழர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக பல நாடுகளில் தங்கி அமைதிச் சூழல் ஏற்பட்டபின் தங்கள் தாயகம் திரும்பிய......நிலையை மனதுக்குள் ஒரு ஏக்கமாய்..... நினைவலைகளை சுழலவிட்டபடி இருந்தேன்.
உலகின் மிகப் பெருமை வாய்ந்த யாழ்பாணம் பொது நூலகம் சிங்களவர்களால் தமிழர்களின்போரின் போது எரித்துச் சாம்பலாக்கிய நிகழ்வு எனது மனதில் மறையாத சுவடாக இருந்துவந்தது. நூலகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொழுந்துவிட்டு எரிந்தது. 28/02/2018 அன்று ஜாப்னா – யாழ்பாணம் சென்றதும் நாங்கள் யாழ்பாணம் பொது நூலகம் இருந்த இடம் நோக்கி சென்றோம்.
நூலகக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் நண்பகல் இரண்டு மணி அளவில் சென்றோம். மாலை நான்கு மணிக்குதான் அனுமதி என்றனர். நாங்கள் தமிழகத்தில் இருந்து எட்டுபேர்கொண்ட கவிஞர் குழு வந்திருக்கிறோம் என்றவுடன் அனுமதி அளித்தனர். உட்புறம் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை.
நூலகத்தில் பல்கலை மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் புத்தகங்களில் மூழ்கி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். தென்னிந்திய தமிழ்ப் புத்தகங்களுக்கு தனியான ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு யாழ்ப்பாண வாசகர் எங்களுக்கு அறிமுகமாகி உள்ளே அழைத்துச் சென்றார். இந்த நூலகம் முற்றிலும் எரிந்தது என்றும் லட்சக்கணக்கான பழம்பெரும் நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆய்வேடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது என்று அவர் கண்களில் நீர் ததும்ப கூறியபோது எங்களின் இதயம் கனத்து அழுதது. உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் உதவியாலும் தற்போதைய அரசின் தமிழ்ப் பிரதிநிதிகளாலும் நூலகம் புத்துயிர் பெற்றது என்றும் கூறினார்.
1981 ஆம் ஆண்டு சிங்கள வெறியர்களால் சூறையாடப்பட்ட, எரிக்கப்பட்ட நூலகம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது மனதுக்கு இதமாய் இருந்தது.
எரிக்கப்பட்ட நூலகத்தின் புகைப்படம் அங்கே இருந்தது. எலும்புக்கூடாய் புத்தகங்களின்றி புகைபடிந்த அந்த நூலகக் கட்டடம் தமிழனின் அவலத்தை எடுத்துக் கூறியது.
இனி விக்கிப்பீடியா சொல்லும் செய்தியை இங்கு காண்போம் :
_______________________________________________
( விக்கிப்பீடியா:
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[5][6]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[5][6].
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.[1] இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது[2]. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது[3][4]. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின்அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
• யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த "The Jaffna Public Library rises from its ashes" என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார்[7]
• எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.)
___________________________________________________
ஆம்...நண்பர்களே யாழ் பொது நூலகம் ஈழத் தமிழர் வாழ்விட வரலாற்றை பறைசாற்றியபடி இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது.
தொடரும்......
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
படங்கள்: எரிக்கப்பட்ட நூலகம் - நன்றி: கூகுள்
தற்போதைய நூலகப் படங்கள் - எங்களது பயணத்தின்போது எடுக்கப்பட்டவை ....

வெள்ளி, பிப்ரவரி 02, 2018

நான் ஏன் ஐக்கூ கவிதைகளை மிகவும் நேசிக்கிறேன்/எழுதுகிறேன்/ரசிக்கிறேன் ?
நான் ஏன் ஐக்கூ கவிதைகளை மிகவும் நேசிக்கிறேன்/எழுதுகிறேன்/ரசிக்கிறேன் ?
****************************************************************************************************************
* ஐக்கூ கவிதைகள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது
* கவிஞரின் சிந்தனை ஒன்றானாலும் கோணங்கள் விரிந்து பல காட்சிகளைத் தருகின்றன.
* எளிதாக சொல்ல வந்த கருத்தை மூன்று வரிகளில்
பதிவிடும் போது வரிகளின் அமைப்பில் என்னை நானே மறந்து விடுகிறேன்.
* சமூக அவலங்களைச் சுட்டி எழுதும் தற்கால கவிஞர்களின் ஐக்கூ கவிதைகள் தடம் பதித்து வருகிறது சமுதாய வீதிகளில் .
* இயந்திரமாய் உழலும் அவசர உலகில் இந்த மூன்று வரிக்கவிதைகள் படிப்பவர்களை கவர்ந்திழுக்கிறது.
குறுகிய கால அவகாசத்தில் படித்து சிந்தனையைத் தூண்டும் இயபினைக் கொண்டவை இந்த ஐக்கூ கவிதைகள்.
* கொடுக்கப்படும் படத்திற்கு ஏற்றவாறு மூன்று வரிகளில் எழுதப்படும் ஐக்கூ கவிதைகள் தற்போது அதிகரித்து வருவதுடன் சமுதாய மறுமலர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது.
* ஜப்பானிய ஜென் தத்துவம் என்பதிலிருந்து விலகி
தமிழ் மண் சார்ந்த மரபு வழியில் ஏராளமான தமிழ் ஐக்கூ கவிதைகள் இப்போது உருவாகி காலத்தால் அழியா கவிதைகளாய் வலம் வருகின்றன .
* திருக்குறள் ஒன்றே முக்கால் அடி, நாலடியார் நான்கு அடிகள் என தமிழுக்குப் பெருமை சேர்த்தது போல் ஐக்கூ மூன்று அடிகளில் சரித்திரம் படைக்கிறது.
* விடுகதை போன்றும், நகைச்சுவை துணுக்கு போன்றும் பல ஐக்கூ கவிதைகள் பயண நேரங்களில் நமக்கு உடல் சோர்விற்கு மருந்தாகவும், சிரிப்போடு சிந்தனையையும் கொண்டிருக்கும் மருந்தாகவும் ஐக்கூ கவிதைகள் உள்ளன.
* ஏராளமான தமிழ் முகநூல்கள், வார,மாத, காலாண்டு இதழ்கள் தமிழ் ஐக்கூவிற்கு பக்கங்களை ஒதுக்கி வெளியிட்டு வருவதும், கவிஞர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுத் தொகைகள் கொடுப்பதும் இந்த கவிதை உலகையே தமிழ் ஐக்கூ வடிவத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது . மரபு வழி பயணிக்கும் பல இலக்கிய ஆளுமைக் கவிஞர்களும் தற்போது ஐக்கூ எழுதுகிறார்கள் என பெருமைப்படுகிறேன்.
* பல்கலை மாணவர்கள் ஐக்கூ நூல்களை பெருமளவில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற முடிகிறது எனில் இந்த தமிழ் ஐக்கூக் கவிதைகளை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும் ?
* தமிழ் ஐக்கூ வடிவம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு புதிய உத்திகளாக மோனைக்கூ , எதுகை ஐக்கூ என்றும் கண்டுபிடிக்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளதை ஐக்கூ வரலாறு பதிவு செய்வதோடு நான் மிகவும் ரசித்துப் படிக்கும் வகைமை அது.
* சிறு பிள்ளைகள் முதல் முதியோர் வரை விரும்பிப் படிக்கும் கவிதை வடிவம் ஐக்கூ என்பதில் ஐயமில்லை.
* அனைவர் கைத்தட்டலைப் பெரும் அளவில் ஐக்கூ கவியரங்கமும் அண்மையில் நடந்த கவியுலகப் பூஞ்சோலை முகநூல் ஆண்டுவிழாவில் அரங்கேற்றப்பட்டது மனத்தைக் கவர்ந்த ஒன்று.
* இவை எல்லாவற்றுக்கும் மேலாக எனது நேசிப்பிற்கும் எழுதுவதற்கும் ............. நல்ல சிந்தனையை உள்ளடக்கி மூன்று வரிகளில் பிறப்பெடுக்கும் பல ஐக்கூக் கவிதைகள் மனிதநேயமுடன் மானுடம் செழிக்க, மண்ணின் மரபு காத்து , கலாச்சார இலக்கணத்தை உணர்த்தி வருகிறது என்பதும் முக்கிய காரணமாய் விளங்குகிறது என்றே சொல்வேன்.
நீங்களும் வாசியுங்கள் தமிழ் ஐக்கூ நூல்களை.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், நவம்பர் 13, 2017

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு – தன்முனைக் கவிதைகள் – வடிவமைப்பு – கா.ந.கல்யாணசுந்தரம் – இது தெலுங்கிலிருந்து தமிழுக்கு பயணித்த வடிவம்
********************************************************************************************************************
(கவிஞர் வதிலை பிரபா அவர்களின் மகாகவி மாத இதழில் கவிஞர் சாந்தா தத் அவர்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு “ நானிலு” அறிமுகப்படுத்தினார் – அதன் தாக்கத்தில் எனது முதல் நானிலு – தமிழ்க் கவிதைகள் )
.........கா.ந.கல்யாணசுந்தரம்
நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் )

·        மை ஊற்றி எழுதிய
தூவல்கள் அலமாரியை
அலங்கரிக்கின்றன
எனது கவிதை வரிகளுடன் 


·        குளத்தில் வீசிய கல்லொன்று
நீர் வட்டங்களைத் தந்தது
எனது கைகளின் வலிக்கு
மருந்தானது

·        முன்பின் தெரியாவிட்டால்
ஒன்றும் கவலைவேண்டாம்
நாம் அமர்ந்து கொண்டது
எதிரெதிர் இருக்கைகளில்

·        தேனிர் கடைக்குள் பறந்து
எனக்கான கோப்பையில்
அமர்ந்துவிட்டுப் போனது
வண்ணத்துப்பூச்சி

·        உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்

மெல்ல வரும் விடியல்
காலை நடைபயணத்தில்
பனி விலகி மேலெழும்ப
வந்தமரும் பட்டாம்பூச்சி

·        எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்
ஒரு ரசிகை

·        தூரத்தில் இணையும்
இருப்புப்பாதைகள் அருகில்
அமர்ந்தும் உறவை வெறுக்கும்
மனக் காயங்கள்

·        நூல்கண்டு குறைந்துகொண்டே
வந்தாலும் பறந்தபடி
உயரும் பட்டத்தில்
தெளிவாய் எனது வருங்காலம்

·        எனக்குள் யாசிக்கும்
வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில்
முனைப்புடன் நிற்கின்றன
சமுதாய நிகழ்வுகள்  


.........கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, ஆகஸ்ட் 05, 2017

இது யாருக்கான தேடல் ?

இது யாருக்கான தேடல் ?
இரவும் பகலும் உறங்காத இதயத்துடன்
உயர்த்திப் பிடிக்கும் நெஞ்சுரத்துடன்
கண்களில் எதிர்காலத்தின்
வண்ணங்களைத் தேக்கியவாறே 
எத்தனை எத்தனை விடியாத பொழுதுகள் !
ஈரைந்து மாதங்கள் கூட ஒரு மலரைத்
தாங்கும் காம்பென சுகமானச் சுமையாகி
தவத்தின் மனோநிலைதான் இருந்தது !
மகனே உனது வளர்ப்பில் செலுத்தும் கவனங்களால்
ஒரு மண்பாண்டத் தொழிலாளியைப்போல்
எனது கவனங்கள் எப்போதுமே இருந்தது !
எப்பொழுதுமே என்னருகில்
உனை இருக்கச் செய்தல் என்பது
எனது இயலா நிலை என்று உணருகிறேன்....
காலத்தின் தேவை என்ன என்பதை
உனது உணர்வுகளால் தெரியப்படுத்துகிறாய்
பிரிதலுக்கான நேரம்தான் என அறிந்தும்
எதிர்பார்ப்பின்றி அன்பின் எல்லைகளை
விரிவுபடுத்தியத்தில் ஆனந்தம் கொண்டேன் !
அதீத கற்பனை வேண்டாம் வாழ்வில்
இயல்பின் வெளிப்பாடுகளை நுகர்வதில் ...
உனக்கான அடையாளங்களை தொலைக்காதே !
உன்னை உணர்ந்துகொண்டபிறகும்
யாருக்காகவும் மாற எப்போதும் நினைக்காதே !
தனித்துவ மேன்மையில் உனது
வெற்றிக் கொடிகள் எப்போதும் பறக்கட்டும் !
இந்த முதியோர் இல்லத்தில்
என்னிடமிருக்கிறது உனக்கான முத்திரை....
நானொரு முலையூட்டி வெப்ப இரத்த
வாழ்வினமே.....!...ஆம் மகனே .....
இது யாருக்கான தேடல் ?
வாழை அடி வாழைதான் இந்த மானுடம் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
(உலகத் தாய்ப்பால் வாரம் )

இதுதான் கார் காலமோ ?

மின்னல் வெட்டிய பொழுதில்
மழைச் சாரல் !
துளிர்த்தலும் உதிர்தலும்
அன்றாட நிகழ்வுகள் ....
தெருவெங்கும் செந்நிற இலைகளால் 
ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு !
நீ...நடந்த பாதைகளில்
உதிர்த்த புனகைக் கோட்டின் எல்லைகளில்...
தவம் செய்யும் புல்லின் பனித்துளிகள் !
ஒன்றிரண்டு நனைந்த பறவைகள்
சிறகு விரித்தலில் சிந்தும்
மழைத் துளிகள் ...
இதுதான் கார் காலமோ ?
மங்கிய மாலைப் பொழுதில்
மேற்கு திசை வானம்
கவிழ்ந்து கிடக்கிறது !
மேகங்களைச் சுமந்தபடி
கிழக்கிலிருந்து புறப்பட்ட
ஈரமற்ற உனது குடைக்குள்
இறக்கத்துடன்
ஒரு இதயம் பயணிக்கிறது.....
யாருக்கும் தெரியாமல் !
திண்ணையில் அந்தக் குடையை
மடக்கி வைக்காதே....
அது மரணித்துவிடும் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 07, 2017

ஒரு பூக்கால ஆலாபனை .... *******************************

ஒரு பூக்கால ஆலாபனை ....
******************************************************
(கவிதாஞ்சலி )

நிலவில் இருந்து வந்தவன் என்பதால் 

கடவுளின் முகவரியைக் கேட்டுப் பார்த்தேன்... 
இறந்ததால் பிறந்தவன் என்று சொல்லி 
இது சிறகுகளின் காலம் எனப் பறவையின் பாதையை 
உனது சுட்டுவிரலால் அடையாளம் காட்டினாய் !
விலங்குகள் இல்லாத கவிதைக்கு 
மின்மினிகளால் ஒரு கடிதம் எழுதி....
பூப்படைந்த சபதமாய் முத்தமிழின் முகவரிக்கு 
பால்வீதி சமைத்தாயே !
ஆனால் கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லையென 
தேவகானமாய் ஒரு ரகசியப் பூவை 
அந்தச் சிலந்தியின் வீட்டில் சூட்டி மகிழ்ந்தாய் !பசி எந்த சாதி என முழக்கமிட்டு 
காக்கைக்குச் சோறும் போட்டு....
புதுக்கவிதைக் குறியீட்டில் பித்தனாய் 
வாழ்ந்ததெல்லாம் நேயர் விருப்பமாய்... 
சொந்தச் சிறையின் சுவர்கள் பேசிக்கொள்கின்றன...!
கம்பனின் அரசியல் கோட்பாட்டில் 
நெருப்பை அணைக்கும் நெருப்பாகி 
நெகிழவைத்தாய் !
கரைகளே நதியாவதில்லைதான்.... ஆனால் 
காற்றை உனது மனைவியாக்கிக் காலமெல்லாம் 
முத்தங்கள் ஓயாமால் கொடுத்து வந்தாய் !
அவளுக்கு நிலா என்றும் பெயர் சொல்லி ....
ஒரு பூக்கால ஆலாபனைக்குள்... 
நீயொரு சோதிமிகு நவகவிதையானாய் !


வீட்டின் கதவுகளைக் காயங்கள் என்றே... 
தட்டாதே திறந்திருக்கிறது மனிதநேயமாய் 
என அனைவரையும் வரவேற்ற கவிக்கோவே...
மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல...
எனச் சொல்லிக்கொண்டே 
விதை போல் விழுந்தவன் நீ...! 
எங்களை அடைகாக்கும் கவிதைப் பறவை நீ ... 
இந்த முட்டை வாசிகளுக்கு....
எம்மொழி செம்மொழியென அடையாளம் 
காண்பித்தவன் நீ....உனது இழப்பில் 
தொலைபேசிகளும் கண்ணீர் சிந்தின...!
வாழும் கவிதைகளில் உறங்கும் அழகனாய் 
உலா வருகிறாய்....
நீ....இல்லையிலும் இருக்கிறாய்....
ஆம்....
இப்பொழுது பாலை நிலாவும் 
உனக்காக ஹைக்கூ பார்வையோடு 
கஜல் ஒளிகளைச் சிந்திக்கொண்டிருக்கிறது !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.
(கவிக்கோ எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் பெயர்களைக் கொண்டே அவர்களுக்காக நான் எழுதிய அஞ்சலிக் கவிதையை தடாகம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டது . நன்றியுடன். )

செவ்வாய், மே 16, 2017

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

1999 ல் இருமொழிகளில் (தமிழ்-ஆங்கிலம் ) வெளியான எனது " மனிதநேயத் துளிகள் " ஹைக்கூ கவிதைகள் இப்போது நம்மொழிப் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக (தமிழ் மட்டும் ) சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்: 
9443259288
புத்தக விலை ரூ. 80/-
(அஞ்சல் வழி பெற ரூ. 100/-)
வங்கிக் கணக்கு:
KALYANASUNDARAM N
UNION BANK OF INDIA
VELACHERY BRANCH
A/C NO: 579002030000004
IFSC UBIN0557901