கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

அவனுக்கு முடிந்தது...


காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

பேசத்தெரியாத குழந்தை


குழந்தை வீரிட்டு அழுத சப்தம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை
ஓடி வந்து கேட்க வைத்தது....
'அடியே பொன்னம்மா....ஏண்டி
கொழந்தய இப்படி அடிக்குற? '
கையில் கிடைத்ததைக் கொண்டு
குழந்தையை அடித்தவள் இப்போது
வாரியணைத்தபடி சொன்னாள்....
'பின்ன என்னாக்கா....பத்து பாத்திரம்
தேச்சு வாங்கின சம்பளத்துல
புது சட்டை வாங்கி போட்டா...அத
தொலைச்சிட்டு வந்து நிக்கரா...
அடிச்சாலும் பதிலு இல்ல...'
பொனம்மாவின் குமுரலுக்கு
பேசத்தெரியாத குழந்தை
மனதோடு தேற்றிக் கொண்டது...
'என்னோட புதிய துணி

பக்கத்து வீட்டு கொழந்தையோட
மரப்பாச்சிக்கு கட்டிட்டேன்....
எவ்வளவு அழகா
இருக்கு தெரியுமா?' .


கா.ந.கல்யாணசுந்தரம்.




சிறகை விரி! வானில் எழு!!




எப்போதும் நல்லதை
நினைக்கும்போதெல்லாம்
ஒரு சமுதாயத்தின்
வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று
செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது
முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில்
வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை
காணும் நேரம்
அருகாமையில்தான்
என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம்
என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை
அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின்
புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....
சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும்
பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின்
விளிம்புகளையாவது
தரிசனம் செய்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.






இனி அவள் பாவை அல்ல...





பனி ஆடைக்குள் பவித்திரமாய்
அந்த மார்கழி காலைப்பொழுது!
விடியல் பறவை எழும்முன்
அவள் எழுந்துவிட்டாளோ?
காரணம் பனிபெய்த ஈரமண் வீதியில்,
தோழிகளுடன் அவளது பாத முத்திரைகளின்
அடையாளம் நன்றாகவே தெரிகிறது!
பாவை நோன்பில் ஆண்டுதோறும்
பயணித்திடும் அவளது எதிர்பார்ப்புகள்
வெறும் காத்திருப்புகளாகவே இருக்கின்றன!
இல்லை... இல்லை... இந்த ஆண்டு மட்டும்
அவளுக்கான இந்திரவனம்
என்னுள் பூத்திருக்கிறது....ஆம்
இனி அவள் பாவை அல்ல...
திருப்பாவை!

கா. ந.கல்யாணசுந்தரம்.