கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, மார்ச் 23, 2012

விடியல் பறவைகள்

'அருவி ' கவிதை இலக்கிய காலாண்டிதழில் ( ஹைக்கூ - 786 சிறப்பிதழ்) இடம்பெற்றுள்ள எனது கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* பூங்காவில்
ஒரு நேர்காணல்
பூக்களோடு

* மண்வாசனையின்
தாய்வீடானது
பிறந்த கிராமம்

*வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி

* ஒட்டடைக் குச்சியின்
ஒரு சிதைந்த வரலாறு
சிலந்தி வலைகள்

* மேய்ச்சல் இடமின்றி
தவித்துப் போயின
மந்தைவெளி மாடுகள்

* சுமப்பதில் எப்போதும்
தோள்களைவிட
மனசு

* நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்

* பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்
கரித்துண்டு ஓவியன்

^ வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில்

* இல்லம் நிறைந்திருந்தது
பொன் பொருளால் அல்ல
மழலைச்சொற்களால்

.......கா.ந.கல்யாணசுந்தரம்,

(நன்றி: அருவி ஹைக்கூ சிறப்பிதழ்)