கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜனவரி 30, 2013

நூலறுந்த பட்டங்கள்!








காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


திங்கள், ஜனவரி 21, 2013

பத்தாம் பசலிக்காரன்

ஊருக்கு செல்லும்
ஒற்றையடிப் பாதைகூட
பாதி காணாமல் போனது!
நல்ல தண்ணீர் குளம் முழுக்க
சாக்கடை நீரோடு
குட்டையாய் காட்சி தர
களத்துமேட்டு குடியிருப்புகள்
அடுக்குமாடியாய் இருந்தது!
கிராமம் நகரமாய்
மாறியிருந்தது!
கிழக்குபுறத்து அம்மன்கோயில்
புது கோபுரத்துடன்
மிளிர்ந்தது!
ஆனால் என்மனம் மட்டும்
ஏங்கித்தவித்து........ இளைப்பாறியது
ஒரு பெரிய ஆலமரத்தடியில்!
30 ஆண்டுகள் இடைவெளியில்
நாங்கள் நட்ட ஆலமரம்
தழைத்திருந்தது அப்படியே !
மகிழ்வில் உரக்க கத்தினேன்....
" மரம் இல்லா வாழ்வு
மரண வாழ்வு " ..என்றவாறு.
அங்கே சென்றவர்களின் பார்வை
என் மீது........
இவன் ஒரு பத்தாம் பசலிக்காரன்
என சொல்லியவாறு.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 11, 2013

மனிதநேயப் பொங்கலிடு!









தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

செவ்வாய், ஜனவரி 01, 2013

சீர்மிகு நல்லுலகு காண

சிந்தனையை முன்னிறுத்தி
சீர்மிகு நல்லுலகு காண
செம்மாந்து வாழ்த்து சொல்வோம்
2013 - ம் ஆண்டு தழைக்கட்டும்!
நல்லுள்ளங்கள்
மகிழட்டும் எந்நாளும் !
வன்மம் வக்கிரம் தொலைத்து
வான்புகழ் வள்ளுவன் வழங்கிட்ட
குறள்வழி வாழ்வோம்
வையகத்தே இன்பமுற்று !

....கா.ந.கல்யாணசுந்தரம்.